புதன், 21 நவம்பர், 2012

யார் செல்வந்தர்?


  ராபின்சர்மா என்கிற ஒரு அமெரிக்கர் எழுதியுள்ள புத்தகம்  The Greatness  Guide என்பது. அந்தப் புத்தகத்தைப் படித்தபோது பல சின்னச் சின்னச் செய்திகள், வாழ்க்கையின் பெரிய பெரிய உண்மைகளை உணர்த்துவதாக இருந்தன. இன்றைக்கு உலகத்திலே இருக்கிற பன்னாட்டு நிறுவனங்களான அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், இன்போசிஸ் முதலான பல நிறுவனங்களினுடைய மேலாளர்களுக்குப் பயிற்சி வகுப்பெடுக்கிறபோது ராபின்சர்மா பேசியது ஒரு கட்டுரையாக வெளிவந்துள்ளது.

அந்தக் கட்டுரையினுடைய தலைப்பு, செல்வத்தின் ஏழு விதங்கள் என்பது. நாம் ஒவ்வொருவரும் அறிந்து கொள்ள வேண்டிய செல்வமாகவே அது இருக்கிறது. பொதுவாக யார் பணம் வைத்திருக்கிறார்களோ அவர்களைத்தான் நாம் செல்வந்தர் என்று சொல்கிறோம். ராபின்சர்மா சொல்கிறார். பணம் வைத்திருக்கிறவர்கள் செல்வர்கள்தான் செல்வத்துக்குப் பணம் ஒரு அடிப்படைக் காரணம் மறுக்க முடியாது. ஆனால் நம்மிடம் இருக்க வேண்டிய ஏழு செல்வங்களில் பணம் ஒன்று. அது ஏழில் ஒரு பகுதியே தவிர, முற்றும் அதுதான் என்று கருதுவதும், அந்தப் பார்வையும் சரியானதில்லை என்பதுதான் அவருடைய பேச்சு. அப்படியானால் மீதம் இருக்கிற ஆறு செல்வங்கள் என்ன என்பதை அவர் வரிசைப்படுத்துகிறார்.

ஒருவனைச் செல்வந்தன் என்று நாம் சொல்ல வேண்டும் என்று சொன்னால், அவனிடத்திலே இந்த ஏழு செல்வங்களும் இருக்க வேண்டும்.

முதல் செல்வம் உடல் நலம்தான்.
இரண்டாவது செல்வம் மனநலம்.
மூன்றாவது செல்வம் குடும்ப நலம்.
நான்காவது செல்வம் தொழில் நலம்.
ஐந்தாவது செல்வம் பண நலம்.
ஆறாவது செல்வம் இலட்சிய நலம்.
ஏழாவது செல்வம் புகழ் நலம்

என்று ஏழு நலன்களை அவர் வரையறுக்கிறார்.

உடல் நலத்துக்கு என்ன அவ்வளவு முக்கியத்துவம் என்றால், இந்த உடல்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக இருக்கின்றது. உடல் சீரழிந்து போய் விடுமேயானால், பிறகு மற்ற செல்வங்கள் எல்லாம் இருந்து பயனில்லை.
மிக அழகான வரியை அவர் குறிப்பிடுகிறார். மிகப் பெரிய பணக்காரனாக இருக்கலாம். ஆனால் மருத்துவமனையிலே இருக்கிற பணக்காரனைக் காட்டிலும், சுதந்திரமாக உலவ முடிகிற உடல் நலம் உள்ள உழைப்பாளி மகிழ்ச்சியாக இருப்பான் இல்லையா என்று கேட்கிறார். எவ்வளவு கோடீசுவரனாக இருந்தாலும் மருத்துவமனையிலே படுத்திருக்கிறபோது, அவன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. மற்ற செல்வங்கள் எல்லாம் இருக்கலாம். உடல் நலம் என்கிற ஒரு செல்வம் இல்லாமல்  போய் விடுமானால் மற்ற செல்வங்களை எல்லாம் அவனால் அனுபவிக்க  முடியாது.

மறைந்த கவிஞர் கண்ணதாசன் அவர்கள்தான் ஒருமுறை மிக அழகாக ஒரு சொன்னார். உலகத்திலே மிகப் பெரியது எது என்று கேட்டபோது, அவர் பணம் என்று சொல்லியிருக்கலாம். ஆனால் அப்படிச் சொல்லாமல் கண்ணதாசன் சொன்னார், உடல் நலம் மட்டும் இருந்து விடுமானால், பிறகு உலகத்திலே உள்ள எல்லாச் செல்வங்களையும் பணம் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும் என்று சொன்னார். நீ போக வேண்டியதுகூட இல்லை பணம் எல்லாவிதமான நலன்களையும் உன் காலடியிலே கொண்டு வந்து குவிக்கும். ஆனால் ஒரு நிபந்தனை மட்டும் இருக்கிறது அது உடல் நலம். உடல் நலம் என்பது பெரிய ஒரு செல்வம்.
அடுத்ததாக மனநலம் என்பதை அதைவிடப் பெரிய செல்வம் நமக்கு மனம் ஆரோக்கியமாக இருக்கிறது. அதிலே குறைபாடு இல்லை என்பது மட்டுமல்ல. அந்த மனம் அன்பினால் நிறைக்கப்பட்டிருக்க வேண்டும். நுட்பமான அறிவைக் கொண்டதாக இருக்க வேண்டும். மனிதநேயம் உடையதாக இருக்க வேண்டும். தொலைநோக்குப் பார்வை உடையதாக இருக்க வேண்டும். அமைதியை நாடுவதாக இருக்க வேண்டும். இத்தனையும் இருந்தால்தான் அது மனநலம். மனநலம் உடையவர்களால்தான் மற்ற காரியங்களை எல்லாம் செய்ய முடியும்.
மூன்றாவதாக  ராபின் சொல்கிறார், குடும்ப நலம் என்பது இன்னொரு செல்வம். அருமையான செல்வம். நீங்கள் என்னதான் அறிவாளியாக இருந்தாலும், என்னதான் செல்வாக்கு உடையராக இருந்தாலும், வீடு என்பது நிம்மதியற்றுப் போகுமேயானால், உங்களால் இயங்க முடியாது. வீடுதான் உங்களினுடைய தொடக்கம். வீடு என்பது உங்களுடைய குடும்பம் மட்டுமல்ல, உங்களைச் சுற்றியிருக்கிற உறவினர்கள், நண்பர்கள் என்று நீங்கள் வைத்துக் கொள்ளலாம். எனவே நமக்கு உடல் நலம் வேண்டும். மன நலம் வேண்டும். உறவுகளோடு... குடும்பத்தோடு... மகிழ்ச்சியான தொடர்பு இருக்க வேண்டும். எந்த நேரமும் வீட்டுக்குள்ளே நுழைந்தால் ஒரு சிக்கலும் பிரச்சினையுமாக இருக்குமென்று சொன்னால், நம்மால் வெளியிலும்கூடச் சரியாகச் சிந்திக்க முடியாது. எனவே குடும்பத்தோடு ஆகிய தொடர்பு என்பதை நாம் எப்போதும் கவனமாய் வைத்துக் கொள்ள வேண்டும். இங்கே வெளியிலேயே கவனம் செலுத்துகிறோம் என்பதினாலே குடும்ப உறவுகள் சிதைந்து போய்விடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு தொழில் நலம் என்று சொல்கிறார். அது ஒரு செல்வம். எந்த இடத்தில் நம்முடைய தொழில் நடக்கிறதோ அல்லது எங்கே நாம் வேலை பார்க்கிறோமோ, அங்கே நம்முடைய உறவும், அங்கே நம்முடைய மனநலமும் எப்படி இருக்கின்றன என்பது, ஏறத்தாழ வீட்டில் கழிக்கிற நேரத்திற்கு இணையாகத் தொழில் சார்ந்த இடங்களிலேயும் நம்முடைய நேரம் கழிகிறது. (உண்மையில் என்னை போன்று வெளிநாட்டு வாசிகளுக்கு நிறையவே…)ஆகையினாலே ஆபிஸ்  என்பதும்கூட நமக்கு மிகக் கவனமாக இருக்க வேண்டிய இடம். எனவே அது நான்காவது செல்வம்.

ஐந்தாவது செல்வமாகத்தான் ராபின்சர்மா பணத்தைக் குறிக்கிறார். அது ஒரு செல்வம்தான். இல்லை என்று யார் சொல்ல முடியும். பணம் இல்லாமல் இந்த உலகத்தில் யாரால் வாழ முடியும். பணம் என்பதுதான் நம்முடைய வேட்கைகளை நிறைவேற்றுகிறது. பணம் என்பதுதான் நம்முடைய வாழ்க்கையை எளிதாக்குகிறது. பணம் இல்லை என்றால் நீங்கள் பத்து மைல் நடக்க வேண்டும். பணம் இருந்தால் மகிழ்வுந்திலே போகலாம். வாழ்க்கையை அது எளிமையாக்குகிறது. நேரத்தை மிச்சமாக்குகிறது. எனவே பணம் ஒரு செல்வம்தான் ஆனால் அது ஐந்தாவது செல்வம்.

ஆறாவதாக ஒரு செல்வத்தை அவர் குறிப்பிட்டார். எவன் ஒருவன் லட்சிய வெளியோடு இருக்கிறானோ அவன்தான் தொடர்ந்து காரியங்களைச் செய்வான். முடிந்து போயிற்று என்று கருதுகிறவன் எவனும் தொடர்ந்து பணியாற்றமாட்டான். எவரையாவது இமயம் என்றும் சிகரம் என்றும் சொன்னால் அவருடைய வேலை முடிந்துவிட்டது என்று பொருள். சிகரத்திற்கு மேலே என்ன இருக்கிறது. எனவே அதையும் தாண்டிப் போக வேண்டும் என்கிற வெறியைத் தனக்குள் வளர்த்துக் கொள்கிறபோது மட்டும்தான் நம்மாலே இயங்க முடிகிறது. எப்போது இயக்கம் என்பது அடுத்த கட்டத்தை நோக்கியதுதான். கடந்து வந்த பாதையை நினைத்துப் பார்ப்பது இயக்கமன்று. அடுத்த கட்டத்தை நோக்கியதான். எழுத்தாளருக்கு இன்னொரு புத்தகம் எழுத வேண்டும். ஒரு கலைஞருக்கு இன்னொரு படைப்பை உருவாக்க வேண்டும். விஞ்ஞானிக்கு இன்னொன்றைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்கிற அடுத்த கட்டத்தை நோக்கிய நகர்வு இருக்கிறது பாருங்கள்... அதிலே இருக்கிற ஒரு வெறி இருக்கிறதே... அது ஒரு செல்வம் என்று ராபின்சர்மா சொல்கிறார். அந்த உணர்வு உந்துதல் நம்முடைய வாழ்க்கையிலே ஒரு செல்வம்.

ஏழாவதாக இருக்கிற செல்வம் என்ன என்று கேட்டால், ஏழாவது கடைசி இடத்திலே இருந்தாலும்கூட அதுதான் எல்லாச் செல்வங்களுடைய சாரமாக இருக்கிறது. புகழ் என்பது ஒரு செல்வம். ஆறு செல்வத்தைக் கொண்டுதான் இந்த ஏழாவது செல்வத்தைப் பெற முடியும். ஆனால் ஏழாவது செல்வத்தைப் பெற்று விட்டால் இந்த ஆறு செல்வங்களும் என்றைக்கும் மிஞ்சும். உடல் நலம். மனநலம்; குடும்ப நலம், தொழில் நலம்., மனநலம், லட்சிய நலம், புகழ் நலம் என்கிற இந்த ஏழு நலன்களும் ஏழு செல்வங்கள். இந்த ஏழு செல்வங்களும் யாரிடம் இருக்கிறதோ அவரை நீங்கள் செல்வந்தர் என்று அழைக்கலாம் என்பது அந்தக் கட்டுரையினுடைய சாரம்.

வியாழன், 1 நவம்பர், 2012

‘வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்’



வாசிப்பு பழக்கம் என்பது அருமையான ருசி. அழகான பசி. ஒருமுறை சுவைக்கப் பழகிவிட்டால் அது தொடர்ந்து வரும். எழுத்துக்களையோ, சிந்தனைகளையோ யாரும் யாருடைய மூளையிலும் திணிக்க முடியாது. அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட முயற்சியின் மூலம் நடைபெறும்.
15 வயது ஆகிற குழந்தை இன்று 24 மணி நேரத்தில் 15 மணி நேரத்துக்கும் அதிகமாக பாடப்புத்தகங்களுடன் செலவிடுகிறது. கல்லூரி வரை நம் குழந்தைகளின் மூளையில் திணிக்கப்படுகிற பாடப்புத்தகங்களைத் தவிர அவர்களுக்கு வேறென்ன படிக்க கற்றுத்தருகிறோம்? வாசிப்பு பழக்கம் என்பது பசியாகவும் ருசியாகவும் இருக்க வேண்டிய நிலைமை மாதிரி, நம் அடுத்த தலைமுறைக்கு அது அலர்ஜியாகிவிட்டது.
வாசிப்பதால் மனிதன் பூரணமடைகிறான்
வாழ்க்கையில் நமக்கு சுவாரஸ்யங்கள் எத்தனையோ உண்டு. ஒவ்வொன்றும் நம்மை ஒவ்வொரு விஷயத்துக்கு அழைத்து செல்லும்அந்த வகையில் புத்தகங்கள் வாசிப்பது என்பது ஒரு தனி உலகத்தில் நாம் வாழ்வது போன்றது.
சிறந்த புத்தகங்களே நல்ல நண்பர்கள்.புத்தகங்கள் நம்முடன் பேசும். நம்மை வழிநடத்தும்.
இளைய சமுதாயத்தில் பெரும்பாலோனோர் ஜெயகாந்தனையோ, சுஜாதாவையோ தெரிந்திருக்கவில்லை. ஆனால் நேற்று வந்த நடிகையின் பிறப்பு முதல் இன்றைய வாழ்க்கை வரை தெரிந்து வைத்துள்ளனர்.
என்ன காரணம் இதற்கு?
நீங்கள் படித்துக் கொண்டு இருக்கும் இந்தக் கணினியும், வீட்டின் ஒரு மூலையில் உள்ள தொலைக்காட்சியும் முக்கிய காரணம். இன்னும் தினசரிநாளிதழ், வார இதழ் போன்றவை கூட முக்கிய காரணம். சினிமா குறித்துபக்கம் பக்கமாக வெளியிடும் இவர்கள் புத்தகம் குறித்து பத்திகளில் முடித்து விடுகின்றனர். நம்மை சுற்றி எல்லாம் இப்படி அமையும் போது யார்தான் புத்தக உலகம் குறித்து வெளியே சொல்லுவது?

இதில் முதல் இடம் ஆசிரியர்களுக்கு பெரும்பாலும் குழந்தைகள் ஆசிரியர்கள் சொல்படிதான் ஆரம்பத்தில் நடக்கின்றனர், சிறு வயதிலேயே இந்தப் பழக்கத்தை ஆரம்பித்து மனதில் பதிய வைக்க வேண்டும். பள்ளிகளில் நூலகம் மூலம்சிறு சிறு கதைப் புத்தகங்கள் கொடுத்து அவர்கள் மனதில் புத்தகம் படிக்கும் ஆசையினை விதைக்க வேண்டும். பாடப் புத்தகத்தில் திருக்குறள் இருந்தால் திருக்குறள் புத்தகம் ஒன்று எடுத்து வந்து வாசிக்க வேண்டும்.
அப்போது தான் இந்தக்குறளே நன்றாக உள்ளதே மற்றவை படித்தால் என்ன என்று தோன்றும், தோன்றாவிட்டால் கூட ஆசிரியர்கள் படித்துக்காட்டி இதை செய்ய வேண்டும் என ஊக்குவிக்க வேண்டும்
இரண்டாவது பெற்றோர், வருடாவருடம் தீபாவளி,பொங்கலுக்கு துணி எடுத்துக் கொடுப்பது மட்டும் உங்கள் கடமை. உரிமை அல்ல. ஒரு புத்தகக்கடைக்கு பிள்ளைகளை அழைத்துச் சென்று அவர்கள் விரும்பும் புத்தகம் ஒன்றைக் கூட வாங்கித் தரலாம்.
புத்தகம் படிப்பதை ஊக்குவிக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு பெற்றோருக்குதான் உள்ளது. பல துறைகளிலும் சாதித்தவர்கள் குறித்த சுயசரிதைகள், கதைகள் போன்றவற்றை ஆரம்பத்தில் படிக்கப்பழக்கி அவர்களின் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாய் மாற்றலாம்.
இதற்கு முக்கியமாய் பெற்றோர்கள் புத்தக வாசிப்பாளர்களாய் இருத்தல் அவசியம்.

என்னைக் கவர்ந்த வலைப்பூக்கள்

'இதுவும் கடந்து போகும்'



   மகிழ்வான நோக்கமும், எண்ணங்களும் இதய நோய் வராமல் பாதுகாக்கின்றன. இதற்கு எதிர்மறையான கவலையான சிந்தனைகளும் , நோக்கமும், எண்ணங்களும் தாழ்வு மனப்பான்மையும்  இதய நோய் வருவதற்கு வழி வகுக்கின்றன. 10 ஆண்டுகளின் மிகப்பெரிய எதிர்கால ஆய்வில் நெஞ்சாய்வியல் வல்லுனர்கள் தெரிவிப்பது மன அழுத்த அறிகுறிகள் குறைப்பதன் மூலம் நமது இதயம் பாதுகாக்கப் படுகின்றது என்பதாகும்.இதனால்  இதய நோய் பாதிப்புகள் குறைவாக உள்ளன என்பதாகும்
கவலை என்ற சிறு கல்லை நம் கண்ணுக்கு முன்பாக வைத்து பார்க்கும் போது அந்த சின்ன கல் கூட பெரிய பாராங்கல்லாக இருந்து நம் பார்வையை அது மறைத்து விடுகின்றது. இதனால் எதிரில் இருக்கின்ற வாய்ப்புகள் கூட நம் கண்ணுக்கு தெரிவதில்லை.
வாழ்கையில் மிகவும் செல்வ செழிப்போடு வாழ்ந்த மனிதர் ஒருவர் செல்வமெல்லாம் இருந்த பிறகும்  கவலையோடு காட்சியளித்தார்.
செல்வத்தனின் பக்கத்து வீட்டிலேயே ஓர் ஏழை மிகவும் மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான். இதனை பார்த்த செல்வந்தனுக்கு எப்படியாவது மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியத்தை அந்த ஏழை மனிதனிடமிருந்து பெற்று விட வேண்டும் என்று தீர்மானித்தார்.
ஏழையின் வீட்டிற்குச் சென்ற செல்வந்தன் அந்த ஏழையிடம் 'நீ மகிழ்ச்சியாக வாழ்வதற்கான இரகசியம் என்ன?' என்று கேட்டான்.
ஏனழ மனிதன் தனது வீட்டின்; கூரையில் வைத்திருந்த காகித சுருளை செல்வந்தனிடம் நீட்டினான். 'நீ எப்போது கவலையின் விழும்பில், துன்பத்தின் நிழலில் இருக்கின்றாயோ அப்போது இந்த காகித சுருளை பிரித்து பார்' என்றான்.
அந்த செல்வந்தன் அந்த காகித சுளுளை பத்திரமாக பாதுகாத்து வந்தான். ஒருமுறை அவன் தன் செல்வத்தை எல்லாம் இழந்து கவலையில் ஆழ்ந்தப் போது அந்த காகித சுருளில் இவ்வாறாக எழுதியிருந்தது.
'இதுவும் கடந்து போகும்'.

காலம் உருண்டோடியப்போது செல்வந்தனுடைய கவலையும் மறைந்திருந்தது. செல்வந்தன் இழந்துப் போன செல்வத்தையெல்லாம் மீண்டும் சேர்த்து மகிழ்ச்சியின் விழும்பில் நின்றுக்கொண்டிருந்தான்.
அப்போது அவன் காலில் ஒரு காகித சுளுள் தட்டுப்படுவதை பார்த்தான். அதனை எடுத்து விரித்து வாசித்தப் போது இவ்வாறு எழுதியிருந்தது.
'இதுவும் கடந்து போகும்'.