வெள்ளி, 21 செப்டம்பர், 2012

வெளிநாடுகளிலிருந்து அனுப்பப்படும் தொகைக்கு சேவை வரி உண்டா?


வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் அந்நியச் செலாவணிக்கு சேவை வரி (சர்வீஸ் டேக்ஸ்) இல்லை என மத்திய கலால் மற்றும் சுங்க வரி வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது.
நடப்பு 2012 - 13 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் சேவை வரி 10%&லிருந்து 12% ஆக உயர்த்தப்பட்டது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) சேவை அளிப்புத் துறையின் பங்களிப்பு 59% ஆக உள்ளது. அதேநேரத்தில், மொத்த வரி வசூலில் இந்தத் துறையின் பங்களிப்பு வெறும் 10% ஆகத்தான் உள்ளது.
இந்நிலையில் சேவை வரி வசூலை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வருகிறது. இதன் ஓர் அங்கமாக சென்ற ஜூன் (2012) மாதத்தில் சேவை வரி விதிப்பின் கீழ் புதிதாக பல துறைகள் சேர்க்கப்பட்டன. இது, இம்மாதம் ஜூலை முதல் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதில், வெளிநாட்டினர் இந்தியாவுக்கு செலுத்தும் தொகைக்கும் 12% சேவை வரி விதிக்கப்படலாம் என்கிற சந்தேகம் நிலவியது.
இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மேற்கண்ட பிரிவுக்கு சேவை வரி கிடையாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
உலக வங்கி வெளியிட்டுள்ள புள்ளிவிவரப்படி கடந்த 2011 ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் வசிப்பவர்களிடமிருந்து இந்தியா 6,400 கோடி டாலரைப் பெற்றுள்ளது. நடப்பு ஆண்டில் வளர்ந்து வரும் நாடுகளில் அதிக தொகையைப் பெற்றுள்ளதில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.
வெளிநாடுகளிலிருந்து அனுப்பும் தொகைக்கு சேவை வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதால், இந்தியாவில் டாலர் வரத்து அதிகரித்து, நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பால் ஏற்பட்ட பாதிப்பை எதிர்கொள்ள முடியும்.
வெளிநாடு வாழ் இந்தியர்களிடமிருந்து  (என்.ஆர்.அதிக தொகையைப் பெறுவதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் முன்னிலை வகிக்கின்றன. இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் வெளிநாடுகளில், குறிப்பாக வளைகுடா நாடுகளில் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக